- Home
- உலகம்
- H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
அமெரிக்காவின் H-1B , H-4 விசா நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பல இந்திய குடும்பங்கள் இந்தியாவில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த நீண்ட தாமதத்தால் வேலை இழப்பு, குழந்தைகளின் கல்வி பாதிப்பு, மற்றும் குடும்பங்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா கையில் எடுத்துள்ள விசா அரசியல்
அமெரிக்காவில் வேலை செய்பவர்களுக்கான H-1B விசாவும், அவர்களுடன் இருக்கும் H-4 குடும்பத்தினரின் விசா நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள் காரணமாக, பல இந்தியக் குடும்பங்கள் தற்போது பெரிய பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
அமெரிக்க தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள், பாதுகாப்பு காரணங்களால் விசா நேர்முகத் தேர்வுகளை திடீரென ரத்து செய்ததால், இந்தியாவுக்கு சிறிய காலத்திற்கு வந்திருந்த பலர் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முடியாமல் மாதங்களாக அங்கேயே தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த ரத்து செய்யப்பட்ட நேர்காணல் தேதிகளுக்கு மாற்று தேதிகள் மிக நீண்ட தாமதத்துடன் — சிலருக்கு 2026 ஆரம்பம் வரை — வழங்கப்பட்டுள்ளதால், குடும்பங்கள் முழுவதும் கலக்கத்தில் உள்ளனர்.
வேலை இழப்பு அச்சத்தில் இந்தியர்கள்
அமெரிக்காவில் வேலை செய்பவர்கள், குறிப்பாக H-1B விசாவை வைத்திருப்பவர்கள், இந்த தாமதத்தின் காரணமாக வேலை இழக்க கூட நேரிடம் என கூறப்படுகிறது. வேலைக்கு மீண்டும் திரும்ப முடியாமல் போனால் சம்பளம் நிறுத்தப்படவும், நிறுவனங்கள் விதிமுறைகளின்படி அவர்களை பணியிலிருந்து நீக்கவும் நேரிடலாம்.
பள்ளி மாணவர்களும் தவிப்பு
இதன் விளைவாக பலரது வாழ்க்கைத் திட்டங்கள் முற்றிலும் குழப்பமாகி விட்டன. மேலும், அமெரிக்க பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும் இந்தியாவில் சிக்கிச் சென்றதால், அவர்கள் கல்வியில் இடையூறு ஏற்பட்டு, ஆன்லைன் வகுப்புகளிலும் முழுமையாகப் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இரு நாடுகளில் பிரிந்து வாழும் குடும்பங்கள்
இதே நேரத்தில், H-4 dependent விசா வைத்திருக்கும் குடும்பத்தினும் குழந்தைகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குடும்பங்கள் இரு நாடுகளில் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டதால், மனஅழுத்தமும் உளரீதியான சிரமங்களும் அதிகரித்துள்ளன. அமெரிக்க தூதரகம் புதிய சமூக ஊடகப் பரிசோதனை விதிகளும், பாதுகாப்பு சரிபார்ப்புகளும் காரணமாக இந்த தாமதம் தவிர்க்க முடியாதது என்று தெரிவித்திருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய சுமையாகவே உள்ளது. ரத்துசெய்யப்பட்ட பழைய தேதிகளில் வரக்கூடாது; மறுவழங்கப்பட்ட புதிய தேதிகளிலேயே வர வேண்டும் என்பதே தூதரகத்தின் அறிவுறுத்தல்.
இந்திய குடும்பங்களை நேரடியாக பாதித்துள்ளது
இந்த விசா குழப்பம் பல ஆயிரம் இந்திய குடும்பங்களை நேரடியாக பாதித்துள்ளது. வேலை, கல்வி, குடும்ப வாழ்க்கை—அனைத்திலும் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக அமெரிக்காவில் வசித்து வந்த இந்த குடும்பங்கள் தங்கள் வாழ்க்கை மீண்டும் எப்போது வழக்கத்திற்கு வரும் என்பதில் பெரிய நிச்சயமின்மையில் உள்ளனர். இந்த நிலைமைக்கு அமெரிக்க அரசு எப்போது மேம்பட்ட தீர்வை வழங்கும் என்பதையே அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

