- Home
- Tamil Nadu News
- பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு குட்நியூஸ் சொன்ன போக்குவரத்து துறை
Summer Holiday Special Buses: பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சுப முகூர்த்தம், தொடர் விடுமுறை, வாரமுறை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே தேர்வு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வந்த முழு ஆண்டுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ஏப்ரல் 17 (வெள்ளிக்கிழமை), ஏப்ரல் 18ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் ஏப்ரல் 19ம் தேதி (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 295 பேருந்துகளும், ஏப்ரல் 18ம் தேதி சனிக்கிழமை 310 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 17ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் ஏப்ரல் 18ம் தேதி சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8,072 பயணிகளும் சனிக்கிழமை 6,710 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,296 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

