- Home
- Tamil Nadu News
- சும்மா அதிருதுல்ல! 109 வகை உணவுடன் நயினார் வீட்டில் விருந்து! எடப்பாடிக்கு தடபுடல் கவனிப்பு!
சும்மா அதிருதுல்ல! 109 வகை உணவுடன் நயினார் வீட்டில் விருந்து! எடப்பாடிக்கு தடபுடல் கவனிப்பு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டார். இந்த விருந்து, அதிமுக-பாஜக கூட்டணி உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.

நயினார் நாகேந்திரன் வீட்டில் விருந்து
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற புரட்சிப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஆகஸ்ட் 3) இரவு நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த விருந்து, அதிமுக-பாஜக கூட்டணி உறவை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
நயினார் நாகேந்திரனின் வீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் நடைபெற்ற இந்த விருந்தில், மத்திய அமைச்சர் எல். முருகன், முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா உள்ளிட்ட பல்வேறு பாஜக முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமியை உற்சாகமாக வரவேற்றனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், சண்முகநாதன், இசக்கி சுப்பையா, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
109 வகையான உணவு வகைகள்
இந்த விருந்துக்காக, சுமார் 10,000 சதுர அடியில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு, கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விருந்தில் 'வெஜ் சூப்', முருங்கைக்காய் சூப் உட்பட 4 வகை சூப், 9 வகை ஸ்டார்ட்டர்ஸ், 3 வகை பர்பிக்யூ, 5 வகை சாட் உணவுகள், திருநெல்வேலி அல்வா, காசி அல்வா, பலாப்பழ மைசூர்பாக் உட்பட 11 இனிப்பு வகைகள், 3 வகை போளி, 8 வகை அவித்த உணவுகள், 4 ரொட்டி வகைகள், 8 வகை அரிசி மற்றும் சிறுதானிய உணவுகள், 8 வகை சைட் டிஷ், 6 வகை பஃபே உணவுகள், 15 வகை தோசைகள், 17 வகை ஐஸ்கிரீம், 7 வகை பழச்சாறுகள் என மொத்தம் 109 வகையான உணவுகள் பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், தாமரை மற்றும் இரட்டை இலை சின்னங்களை ஒத்த வடிவத்தில் சில உணவு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விருந்து, அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

