- Home
- Tamil Nadu News
- திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய நீதிபதி கார் விபத்து! 4 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய நீதிபதி கார் விபத்து! 4 பேர் உயிரிழப்பு! நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் பயணித்த கார் லாரி மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். நீதிபதி உட்பட 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த்
Car Accident: தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் உட்பட ஆறு பேர் நேற்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டு விட்டு இன்று காலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கார் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை அருகே தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிக்கொண்டு அரியலூர் நோக்கி முன்னால் சென்றுக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
நீதிபதியின் கார் விபத்து
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். நீதிபதி பூரண ஜெயந்த் ஆனந்த் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
4 பேர் உயிரிழப்பு
நீதிபதி உள்ளிட்ட இரண்டு பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து உயிரிழந்தவர்களான ஸ்ரீதர்குமார், நவீன்குமார், வாசு ராமநாதன், தனஞ்செய ராமசந்திரன் ஆகிய 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
லாரி ஓட்டுநரிடம் விசாரணை
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த கூடலூர் மாவட்டம் பொம்மரக்குடி குளஞ்சி மகன் விஜய் ராஜ் (27) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது கார் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை எற்படுத்தியுள்ளது.

