சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ மூணுக்கும் ஒரே டிக்கெட்! செப் 21 முதல் ஆரம்பம்!
'சென்னை ஒன்' என்ற புதிய செயலி மூலம், மாநகரப் பேருந்துகள், புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே QR குறியீடு டிக்கெட்டில் பயணிக்கலாம். கும்டா உருவாக்கியுள்ள இந்த செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கிறார்.

'சென்னை ஒன்' செயலி
சென்னை மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில், 'சென்னை ஒன்' (Chennai One) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை வருகிற 22-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் புதிய முயற்சி
பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை எளிமையாக்கும் வகையில், 'கும்டா' (Chennai Unified Metropolitan Transport Authority - CUMTA) என்ற போக்குவரத்து குழுமம், ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய செயலியை உருவாக்கியுள்ளது.
QR code டிக்கெட்
பயணிகள் எந்தெந்தப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை பயன்படுத்த விரும்புகிறார்களோ, அவற்றை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம். கட்டணம் செலுத்தியவுடன், கியூ.ஆர். குறியீடு (QR code) கொண்ட டிக்கெட் அவர்களின் மொபைல் போனில் கிடைக்கும்.
ஒரே டிக்கெட் - பல பயணங்கள்
இந்த கியூ.ஆர். குறியீட்டைக் காட்டி, மாநகரப் பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம். இந்த புதிய செயலியின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்து, விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்தத் திட்டம், பயணிகளின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துவதோடு, போக்குவரத்துச் சேவைகளை ஒருங்கிணைத்து, நகர்ப்புறப் பயணத்தை மேலும் திறம்பட மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

