- Home
- Sports
- Sports Cricket
- ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை தடுத்த ஜோ ரூட்..! கண்களை காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் நன்றி!
ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை தடுத்த ஜோ ரூட்..! கண்களை காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் நன்றி!
ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட்டில் சதம் அடித்ததன் மூலம் மேத்யூ ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை ஜோ ரூட் தடுத்துள்ளார். இதன்மூலம் அனைவரின் கண்களைவும் காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் ரூட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் முதல் சதம்
பிரிஸ்பேனில் நடந்து வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஸ்டார் வீரர் ஜோ ரூட் சூப்பர் சதம் (138 ரன்கள்) அடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 40வது சதத்தை விளாசியுள்ள ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் அடித்த முதல் சதம் இதுவாகும். ஜோ ரூட் 206 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
புதிய சாதனை
ஜோ ரூட் ஆஸ்திரேலியாவில் தனது முதல் சதத்தை எட்ட 30 இன்னிங்ஸ்கள் எடுத்துக்கொண்டார். கப்பா டெஸ்டின் முதல் நாளில் சதம் அடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை, மாரிஸ் லேலண்டிற்குப் பிறகு ரூட் பெற்றார். ஒட்டுமொத்தமாக, கப்பா மைதானத்தில் இங்கிலாந்துக்காக டெஸ்ட் சதம் அடித்த எட்டாவது பேட்டர் ரூட் ஆவார்.
நிர்வாணமாக ஓடுவதாக சொன்ன ஹெய்டன்
முன்னதாக ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மேத்யூ ஹெய்டன், இந்தத் தொடரில் இங்கிலாந்து மூத்த வீரர் ரூட் சதம் அடிப்பார். அப்படி அவர் அடிக்கவில்லை என்றால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நிர்வாணமாக நடப்பேன் என்று ஒரு விசித்திரமான சவால் விடுத்திருந்தார்.
இப்போது ஜோ ரூட் சதம் அடித்து மேத்யூ ஹெய்டன் நிர்வாணமாக ஓடுவதை தடுத்துள்ளார்.
ஜோ ரூட்டுக்கு ஹெய்டன் மகள் நன்றி
சதம் அடித்த ஜோ ரூட்டுக்கு ஹெடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட அவர், ''ஆஸ்திரேலியாவில் சதம் அடித்ததற்கு வாழ்த்துகள் நண்பா. இதற்கு சிறிது காலம் ஆனது.
ஆனால் இதில் என்னை விட வேறு யாரும் அதிக அக்கறை கொண்டிருக்கவில்லை. நான் உனது சதத்திற்காக ஆதரவளித்தேன். எனவே வாழ்த்துகள், பத்து அரைசதங்களுக்குப் பிறகு ஒரு சதம். சிறப்பாக ஆடினாய் நண்பா. இதை அனுபவித்து மகிழு" என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், மேத்யூ ஹெய்டனின் மகள் கிரேஸ் ஹெய்டன், ''மிக்க நன்றி ரூட். நீங்கள் எங்கள் அனைவரின் கண்களையும் காப்பாற்றிவிட்டீர்கள்'' என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

