- Home
- Sports
- Sports Cricket
- வைபவ் சூர்யவன்ஷியுடன் RR மேனேஜர் செய்த செயல்.. பொங்கியெழுந்த பிசிசிஐ.. அதிரடி நடவடிக்கை!
வைபவ் சூர்யவன்ஷியுடன் RR மேனேஜர் செய்த செயல்.. பொங்கியெழுந்த பிசிசிஐ.. அதிரடி நடவடிக்கை!
IPL-இன் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பகுதி (PMOA) விதிமுறைகளின்படி, டக்-அவுட் பகுதியில் மொபைல் போன் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மேலாளருக்கு அபராதம்
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் மேலாளர் ரவீந்தர் சிங் பிந்தருக்கு, ஐபிஎல் (IPL) நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏப்ரல் 10-ஆம் தேதி, பார்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது, அவர் டக்-அவுட்டில் மொபைல் போன் பயன்படுத்தியதே இதற்குக் காரணம்.
போன் பயன்படுத்தியது தவறு
IPL-இன் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பகுதி (PMOA) விதிமுறைகளின்படி, டக்-அவுட் பகுதியில் மொபைல் போன் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அணி மேலாளர்கள் மற்றும் மீடியா மேலாளர்கள் தங்கள் போன்களைப் பயன்படுத்தலாம், ஆனால் அது டிரெஸ்ஸிங் ரூமில் மட்டும்தான்; டக்-அவுட்டில் அனுமதி கிடையாது. ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 11-வது ஓவரில் ரவீந்தர் பிந்தர் போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐபிஎல் அறிக்கை கூறுவது என்ன?
இதுகுறித்து IPL வெளியிட்ட அறிக்கையில், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரவீந்தர் சிங் பிந்தர், ஏப்ரல் 10, 2026 அன்று கவுகாத்தியில் நடந்த போட்டி 16-இன் போது, BCCI IPL PMOA விதிகளை மீறியதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறார். அணி டக்-அவுட்டில் மொபைல் போனைப் பயன்படுத்தியது, BCCI IPL PMOA விதிமுறைகளின் பிரிவு 4.1.1-க்கு முரணானது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "திரு. பிந்தர் தனது தவறை ஒப்புக்கொண்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். இது அவருக்கு முதல் முறை விதிமீறல் என்பதால், BCCI IPL PMOA விதிமுறைகளின் பிரிவு 7.42(a)-இன் படி, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருக்குமாறும், நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைவப் சூர்யவன்ஷி பக்கத்தில் அமர்ந்திருந்தார்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோமி பிந்தர் போன் பயன்படுத்திக் கொண்டிருந்த போது, ராஜஸ்தான் அணியின் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அவருக்கு அருகில்தான் அமர்ந்திருந்தார். வைபவ் அந்த போன் திரையை எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதுவே இந்த விவகாரம் பிசிசிஐ வரை செல்ல முக்கிய காரணமாக அமைந்து விட்டது. முதலில் பிசிசிஐ அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
தன்னுடைய உடல்நிலை காரணங்களுக்காக போன் பயன்படுத்தியதாக அவர் விளக்கம் அளித்தாலும், அதை பிசிசிஐ ஏற்கவில்லை. இது முதல்முறை தவறு என்பதால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையுடன் இந்த விவகாரம் முடிக்கப்பட்டது.
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி
முன்னதாக இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான 26 பந்துகளில் 78 ரன்கள் உதவியுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ், அடுத்து மூன்று முறை IPL சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியை, அவர்களின் சொந்த மைதானமான புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

