- Home
- Politics
- திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
திமுகவை வீழ்த்தியே ஆகணும்..! அதிமுக கூட்டணிக்கு வருகிறது தவெக..? இபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்..!
திமுக மக்கள் விரோத அரசாங்கம். அந்த மக்கள் விரோத அரசாங்கத்தை அகற்றக் கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் எங்களோடு தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.

அதிமுக கூட்டணிக்கு தவெக வருமா? என பேசப்பட்டு வரும் நிலையில் சேலத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதற்கு பதிலளித்துள்ளார்.
தவெக கூட்டணியில் தவெக வருமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘நாங்கள் தெளிவாக சொல்லி விட்டோம். திமுக மக்கள் விரோத அரசாங்கம். அந்த மக்கள் விரோத அரசாங்கத்தை அகற்றக் கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் எங்களோடு தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம் என்று ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அதிமுக அரசு இருக்கின்ற பொழுது இதனை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழனுடைய முக்கிய பண்டிகைகளில் தைப்பொங்கல் தான் முக்கியம். அந்த பண்டிகையை மகிழ்ச்சியோடு அனைத்து மக்களும் கொண்டாட வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இந்த பொங்கல் தொகுப்பு கொடுத்தார்கள்.
அம்மாவுடைய அரசு அந்த பொங்கல் கொடுக்கின்ற பொழுது அதோட குடும்ப அட்டைக்கு 200 ரூபாய் நிதியும் கொடுத்தார். இது அதிமுக ஆட்சியில் தொடர்ந்து பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த அரசு அதை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இந்த பொங்கல் தொகுப்பு எவ்வாறு வழங்கப்படும் என்று அறிவிப்பு இதுவரைக்கும் வழங்கவில்லை. நான் ஏற்கனவே எழுச்சி பயணத்தின் போது தெரிவித்தேன். கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அந்த எழுச்சி பயண பொதுக் கூட்டத்தில் நான் தெரிவித்தேன். திமுக அரசால் இந்த ஏழை- எளிய மக்கள் தைப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத ஒரு சூழல் இருக்கிறது. இந்த ஆண்டு திமுக அரசுக்கு இறுதி ஆண்டு. இதற்கு மேல் ஆட்சிக்கு வரமாட்டார்கள்.
அதனால், இந்த ஆண்டு கொண்டாடுகிற விதமாக, மகிழ்ச்சி அடைகின்ற விதமாக, ஒவ்வொரு குடும்பமும் பொங்கல் மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற விதமாக ₹5000 பொங்கல் தொகுப்பு ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், நான் முதலமைச்சரின் காலத்தில் திமுக எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கு 200 ரூபாய் கொடுத்தோம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தார்.
அப்போது ‘‘ஏன் குடும்ப அட்டைகளுக்கு ரூ.5000 வழங்கக் கூடாது? எனக் கேட்டார். அதே கோரிக்கையைத்தான் நாங்கள் இப்போது வைக்கிறோம். ஏனென்றால் நீங்கள் இப்போது முதலமைச்சராக இருக்கிறீர்கள். நாங்கள் அப்போது ஆட்சியில் இருந்தபோது எங்களது அரசுக்கு நீங்கள் கோரிக்கை வைத்தீர்கள். குடும்பத்திற்கு 5000 ரூபாய் என்று வழங்க வேண்டும் என்று அந்த கோரிக்கையைத் தான் நாங்கள் இப்போது வைக்கிறோம். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 5000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
தவெகவினர் அவர்களை தூய சக்தி என்று சொல்லிக்கொள்கிறார்கள். அதற்கு தார்மீக உரிமை இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘அடுத்த கட்சியைப்பற்றி நாங்கள் என்ன சொல்வது? அவர்களின் கருத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதோடு சரி. அது தூய்மையா? இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஏற்கெனவே எங்கள் கழக துணைப்பொதுச்செயலாளர் அதற்கு அழகாக விளக்கம் அளித்திருக்கிறார். பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. உங்களுக்குப் புரிந்திருக்கும்.
திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய ஒரு குழு அமைத்திருக்கிறது. கடந்த முறை அவர்கள் இப்படித்தான் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஒரு குழு போட்டு ஊர் ஊராகப் போய் மக்களை சந்தித்து 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதில் எத்தனை அறிவிப்புகளை நிறைவேற்றி இருக்கிறார்கள்? உதாரணத்துக்கு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிப்போம் என்றார்கள். அதை உயர்த்தினார்களா? 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார்கள். உயர்த்தினார்களா? மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்கள். அதை தள்ளுபடி செய்தார்களா? காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுப்பதாகச் சொன்னார்கள். கொடுத்தார்களா? பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக சொன்னார்கள். பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்தார்கள். டீசல் விலையை குறைக்கவே இல்லை.
இப்படி 525 அறிவிப்புகளில் நாலில் ஒரு பங்குகூட நிறைவேற்றவில்லை. இப்படி கவர்ச்சிகரமான அறிக்கையை விட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம். இப்போதும் அதுபோல்தான் நடக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அதிமுக தலைமை விரைவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவிக்கும்’’ எனத் தெரிவித்தார்.
