- Home
- Lifestyle
- Parenting Tips : நீங்க சிறந்த பெற்றோரா இருக்கனுமா? அப்ப இந்த '5' விஷயங்களை கண்டிப்பா பாலோ பண்ணுங்க
Parenting Tips : நீங்க சிறந்த பெற்றோரா இருக்கனுமா? அப்ப இந்த '5' விஷயங்களை கண்டிப்பா பாலோ பண்ணுங்க
சிறந்த பெற்றோராக இருக்க விரும்பும் ஒவ்வொரு தம்பதியரும் கடைபிடிக்க வேண்டிய ஐந்து விஷயங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை வளர்ப்பு ஒருபோதும் சாதாரணமான விஷயம் கிடையாது. குழந்தைகளின் கல்வி, உடல் நலம், மனநலம் ஆகியவற்றின் மீது பெற்றோருக்கு அதிக பொறுப்புள்ளது. இது அவர்களின் கடமையாகும். இன்றைய காலகட்டத்தில் பெற்றோருக்கு பொறுப்புகள் அதிகமாகிவிட்டன. அவர்களுடைய திரைநேரம், பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கண்காணிக்க வேண்டிய அவசியமுள்ளது. இந்தப் பதிவில் சிறந்த பெற்றோராக இருக்க விரும்பும் ஒவ்வொரு தம்பதியினரும் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பெற்றோரின் சொத்து கிடையாது. பெற்றெடுத்தாலும் குழந்தைக்கு தனி விருப்பு வெறுப்புகள் உண்டு என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கென்றே தனித்துவமான குணநலங்கள் உள்ளன. ஒவ்வொரு குழந்தையும் புத்திசாலிதான். ஆனால் எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அதனால் குழந்தைகளை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம்.
பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகளின் மீது திணிக்கக் கூடாது. குழந்தைகள் தவறுகள் செய்து கற்றுக் கொள்வதை, தங்கள் பாதையை தேர்ந்தெடுப்பதை பெற்றோர் அனுமதிக்க வேண்டும். இதுவே அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. அவர்களை இயல்பாக வளரவிடுங்கள். ஆபத்தையும், அறம் தவறும் செயல்களையும் சுட்டிக் காட்டி வளருங்கள்.
குழந்தைகள் எப்போதும் பெற்றோர் சொல்வதை கேட்பது கிடையாது. ஆனால் அவர்களைப் பார்த்து வளர்கிறார்கள். குழந்தைகள் நல்ல குணங்களுடன் வளர வேண்டுமென்றால் பெற்றோர் அந்த குணங்களை வளர்த்துக் கொள்வது அவசியம். நீங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்தால் அவர்கள் சிறப்பாக வளருவார்கள். எப்போதுமே பெற்றோர் பதட்டமாக, விரக்தியாக இருந்தால் அந்த உணர்ச்சிகள் குழந்தைக்கும் வரும். பொறுமையிழந்த பெற்றோர் குழந்தையையும் அப்படியே தங்களுக்கு தெரியாமல் மாற்றுகிறார்கள். அதனால் பெற்றோர் நிதானத்துடனும் பதட்டமின்றியும் சூழலைக் கையாண்டால் குழந்தைகளும் அவ்வாறு வளருவார்கள்.
குழந்தைகளின் மதிப்பெண்கள், கோப்பைகள், திறமைகள் ஆகியவற்றில் மட்டும் பெற்றோர் கவனம் செலுத்தக்கூடாது. மகிழ்ச்சியான குழந்தைகள் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதை பெற்றோர் மறந்து விடக்கூடாது. உங்களுடைய குழந்தையை மகிழ்ச்சியான சூழலில் மகிழ்ச்சியான குழந்தையாக வளர்ப்பது தான் முதல் கடமையாகும். குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக செயல்படுகிறார்கள் என்பதை பெற்றோர் கவனித்து பார்க்கவேண்டும். அவர்களுடைய முயற்சிக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்யும் நேர்த்தியான பெற்றோராக இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம். நூறு சதவீதம் சரியான பெற்றோர் என்று யாருமே இங்கு இல்லை குழந்தைகளை வளர்க்கும் போது மகிழ்ச்சியாக அதை செய்யுங்கள். எந்தக் குற்ற உணர்ச்சியும், ஒப்பிடுதலும் இல்லாமல் இருப்பது அவசியம். தன்னுடைய பெற்றோர் சரியாக தீர்ப்பிடும் நீதிபதியாக இருக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவதில்லை. பெற்றோர் தங்களுடன் போதுமான நேரம் செலவிட வேண்டும் என்பது மட்டுமே குழந்தைகளின் எண்ணமாக இருக்கும். அவர்களை குற்றஞ்சாட்டாமல் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுங்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சிறந்த பெற்றோராக இருக்க நினைப்பது என்பது உங்களை நீங்களே வளர்த்தெடுப்பதுதான். குழந்தைகளுடன் நீங்களும் குழந்தையாக மாறிவிடுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

