- Home
- Lifestyle
- Cooling Chapati: கோடை காலத்தில் உடலை குளுகுளுவென வைக்கும் 5 வகை சப்பாத்திகள்.! செய்வது எப்படி? செய்முறை இதோ.!
Cooling Chapati: கோடை காலத்தில் உடலை குளுகுளுவென வைக்கும் 5 வகை சப்பாத்திகள்.! செய்வது எப்படி? செய்முறை இதோ.!
5 Cooling Roti Recipes : கோதுமை பொதுவாக உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியது என்பதால், அதனுடன் பின்வரும் பொருட்களைச் சேர்த்து சப்பாத்தி செய்வது கோடை காலத்தில் சிறந்த பலனைத் தரும். அந்த பொருட்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Summer Special Chapati Recipes - கோடைக்கு ஏற்ற சப்பாத்தி வகைகள்
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொளுத்தும் வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளைத் தேடுவோம். நாம் தினமும் சாப்பிடும் சப்பாத்தியையே குளிர்ச்சியாகச் செய்தால் எப்படி இருக்கும்? வாங்க, உடலுக்கு குளிர்ச்சி தரும் 5 வகை சப்பாத்தி ரெசிபிகளையும் அதன் பலன்களையும் பற்றிப் பார்க்கலாம்.
புதினா சப்பாத்தி
கோடை காலத்தில் நீங்கள் புதினா சப்பாத்தி செய்யலாம். இதற்கு, கோதுமை மாவில் பொடியாக நறுக்கிய புதினா, உப்பு, சிறிது சீரகம் சேர்த்து மென்மையாகப் பிசைந்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து, சாதாரண சப்பாத்தி போல சுட்டு, மேலே நெய் தடவலாம். இந்த புதினா சப்பாத்தி உடலுக்கு குளிர்ச்சி தந்து, செரிமானத்திற்கு உதவுகிறது. புதினா வாய் துர்நாற்றத்தையும் நீக்கும். புதினா மல்லித்தழை ஆகியவற்றை பேஸ்ட் போல அரைத்து கோதுமை மாவுடன் சேர்த்து பிசைந்தும் சப்பாத்தி செய்யலாம்.
வெள்ளரிக்காய் சப்பாத்தி
துருவிய வெள்ளரிக்காயில் உள்ள தண்ணீரை பிழிந்துவிட்டு, அதை கோதுமை அல்லது சோள மாவுடன் கலந்து மென்மையாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு, இதை சப்பாத்தியாக சுட்டு சாப்பிடலாம். இது உடலை நீரேற்றமாக வைத்து, உடல் வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றுக்கும் நல்ல குளிர்ச்சியைத் தருகிறது. வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் அதிகம் கிடைக்கும் என்பதால் இந்த சப்பாத்தியை முயற்சி செய்து பாருங்கள்.
சுரைக்காய்/பூசணிக்காய் சப்பாத்தி
நீர் காய்களான சுரைக்காய் அல்லது பூசணிக்காயை கொண்டும் சப்பாத்தி செய்ய முடியும். வெள்ளரிக்காய் சப்பாத்தியை போலவே சுரைக்காய் அல்லது பூசணிக்காயை துருவி கோதுமை மாவுடன் பிசைந்து சப்பாத்தியாக செய்யலாம். அல்லது அரைத்து சாறெடுத்து அதையும் கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாக செய்யலாம். இந்த நீர் காய்களில் இருக்கும் சத்து உடலுக்கு நீரேற்றத்தை அளிக்கிறது.
தயிர் சப்பாத்தி
சாதாரணமாக சப்பாத்திக்கு பிசையும் மாவில் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து பிசைந்து, பிறகு சப்பாத்தி செய்யவும். இந்த சப்பாத்தி உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. இதில் உள்ள ப்ரோபயாடிக் (probiotic) வயிற்றுக்கு நன்மை செய்யும். தயிர் சேர்ப்பதால், சாதாரண சப்பாத்தியை விட இது மிகவும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
வெந்தயக் கீரை சப்பாத்தி
கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு லைட்டான காலை உணவு. மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வெந்தயக்கீரக, உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்த்து பிசையவும். இது சாதாரண சப்பாத்தியை விட சற்று தடிமனாக இருக்கும். சிறிது நெய் விட்டு சுட்டு எடுக்கவும். இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலை லேசாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.
சத்து மாவு சப்பாத்தி
வெயில் காலத்தில் சத்து மாவு சப்பாத்தி மிகவும் நன்மை தரும். சத்து மாவு என்பது வறுத்த கடலைப் பருப்பின் மாவு. இந்த மாவுடன் சிறிது கோதுமை மாவு, உப்பு, கொத்தமல்லி, வெங்காயம், எலுமிச்சை சாறு சேர்த்து பிசையவும். இதை சப்பாத்தியாகவோ அல்லது பராத்தாவாகவோ செய்யலாம். இதில் உள்ள இயற்கையான குளிர்ச்சித் தன்மை, உடலுக்கு ஜில்லுனு உணர்வைத் தந்து, வெப்ப பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கிறது. உடனடி ஆற்றலையும் கொடுக்கிறது.
எண்ணெய்க்குப் பதிலாக நெய்யை பயன்படுத்துங்கள்
சப்பாத்தியை சுடும் பொழுது எண்ணெய்க்குப் பதிலாக பசு நெய்யை பயன்படுத்தலாம். நெய் செரிமானத்திற்கு உதவும் மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். அதிகமான எண்ணெயில் பொரித்து எடுப்பதை தவிர்க்க வேண்டும். அது உடலில் பித்தத்தை அதிகரித்து உடல் வெப்பத்தை மேலும் கூட்டும். சப்பாத்தியுடன் சூடான அல்லது மசாலா நிறைந்த குழம்புகளை தவிர்த்து வெங்காய தயிர் பச்சடி, வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, பூசணிக்காய் கூட்டு அதிக காரம் இல்லாத பாசிப்பருப்பு கடைசல், வெந்தயக்கீரை கடைசல் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது உடல் சூட்டைக் குறைக்க உதவும்.
ராகி மாவு அல்லது பார்லி மாவு சேர்க்கலாம்
இந்த கோடை காலத்தில் சப்பாத்தியை மிகவும் சூடாக சாப்பிடுவதை தவிர்க்கவும். சப்பாத்தி சற்று ஆறிய பிறகு சாப்பிடுவது நல்லது. சப்பாத்தி சாப்பிட்ட பின்னர் சிறிது மோர் அல்லது இளநீர் பருகுவது உடலுக்கு உடனடி குளிர்ச்சியைத் தரும். கோதுமை மாவுடன் ராகி மாவு சேர்ந்த பிசைவது உடலுக்கு மேலும் குளிர்ச்சி தரும். அதே போல் பார்லி மாவு சேர்த்து செய்வது உடல் சூட்டை தணிக்க உதவும் மிகச்சிறந்த முறையாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

