செப். 2025 க்குப் பிறகு 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? ஆர்பிஐ சொன்னது என்ன?
ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற வதந்தி தவறானது. ரிசர்வ் வங்கி அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை. சிறிய மதிப்பு நோட்டுகளை ஏடிஎம்களில் அதிகரிக்கவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ரூ.500 நோட்டுகள் செல்லாதா?
செப்டம்பர் 2025-க்குள் ரூ.500 ரூபாய் நோட்டுகள் செல்லாது" என்று கூறி வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என இந்திய அரசின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB (Press Information Bureau) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த வதந்தியால் மக்களிடையே ஏற்பட்ட குழப்பத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வதந்தியை நம்ப வேண்டாம்
ரிசர்வ் வங்கி (RBI) ரூ.500 நோட்டுகளை விரைவில் புழக்கத்தில் இருந்து நிறுத்தப் போகிறது என்று ஒரு தவறான செய்தி சமீபகாலமாக வைரலாகப் பரவி வந்தது. இதை அடுத்து, அரசாங்கம் தலையிட்டு நிலைமையை தெளிவுபடுத்தியுள்ளது.
"ரிசர்வ் வங்கி இத்தகைய எந்த அறிவுறுத்தலையும் வெளியிடவில்லை. ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். இத்தகைய செய்தியை நம்புவதற்கு அல்லது பகிர்வதற்கு முன் எப்போதும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து சரிபார்க்கவும்!" என்று PIB உண்மைச் சரிபார்ப்பு குழு, தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ரூ.500 நோட்டுகள் செல்லுபடியாகும்
எனவே, பொதுமக்கள் தங்கள் ரூ.500 நோட்டுகள் முற்றிலும் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையோ எதுவும் இல்லை.
ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையால் குழப்பமா?
இந்தக் குழப்பத்திற்கு சமீபத்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையே ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அந்த சுற்றறிக்கை ரூ.500 நோட்டுகள் குறித்து அல்ல. மாறாக, நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 போன்ற சிறிய மதிப்புள்ள நோட்டுகளின் இருப்பை மேம்படுத்துவது குறித்துதான் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் திட்டம் என்ன?
செப்டம்பர் 30, 2025-க்குள், 75% ஏடிஎம்களில் குறைந்தது ஒரு கேசட்டாவது ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகளை வழங்கும் வசதியைக் கொண்டிருக்க வேண்டும். மார்ச் 31, 2026-க்குள், இந்த விகிதம் 90% ஆக அதிகரிக்க வேண்டும். இதுதான் ஆர்பிஐ (RBI) சுற்றறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்.
எனவே, ரூ.500 நோட்டுகள் குறித்துப் பரவும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

