சென்னை டூ ஹைதராபாத் 8 மணி நேரத்தில் போகலாம்! 'வந்தே பாரத்' ரயில்! முக்கிய அறிவிப்பு!
சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Chennai to Hyderabad Vande Bharat Express
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் தவிர தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் நாட்டிலேயே அதிவேகமாக செல்லும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற ரயில்களை விட அதிவேகமாக செல்வதாலும், பயண நேரம் குறைவதாலும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் மவுசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வந்தே பாரத் ரயில்கள்
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு, கோவை, நெல்லை, நாகர்கோவிலுக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னையில் இருந்து நாட்டின் ஹைடெக் நகரமான ஹைதராபாத்துக்கு வந்தே பாரத் இயக்கப்படாதது பயணிகளுக்கு ஏமாற்றம் அளித்து வந்தது.
சென்னை டூ ஹைதராபாத் வந்தே பாரத் ரயில்
இந்நிலையில், சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் வழித்தடத்தில் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மொத்தம் 720 கிமீ. சென்னையில் இருந்து இப்போது இயக்கப்படும் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் 14 மணி நேரத்தில் ஹைதராபாத் சென்றடைகிறது. ஆனால் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு வெறும் 8 அல்லது 9 மணி நேரத்தில் சென்று விட முடியும். இதன்மூலம் 5 மணி நேரம் மிச்சப்படுத்த முடியும்.
வந்தே பாரத் எந்த வழியாக இயக்கம்?
இதேபோல் சென்னை டூ ஹைதராபாத் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் அந்த ரயில் நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாரங்கல், காசிபேட் சந்திப்பு, செகாந்திரபாத் சந்திப்பு ஆகிய முக்கிய இடங்களில் மட்டும் நின்று செல்லும்.
ஏற்கெனவே சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கு அரக்கோணம், திருப்பதி வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. ஆகவே சென்னை டூ ஹைதரபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் வழியாக இயக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னையும், ஹைதராபாத்தும் நாட்டின் முக்கிய வர்த்தக நகரங்களாக விளங்கி வருகின்றன. பெங்களூருவுகு அடுத்து தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குகின்றன. இதனால் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே அதிக அளவு மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆகவே கூடிய விரைவில் சென்னை டூ ஹைதரபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
