நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்
இந்தியாவுக்கு பல ஜெய்சங்கர்கள் தேவையா என்ற கேள்விக்கு, தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடியை மையப்படுத்தி அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹனுமான் ராமன் உதாரணம்
“இந்தியாவுக்கு இன்னும் பல ஜெய்சங்கர்கள் தேவையா?” என்ற கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சிந்திக்க வைக்கும் பதிலை அளித்துள்ளார். அந்தக் கேள்வியின் அடிப்படையே தவறானது என குறிப்பிட்ட அவர், ஒரு நாட்டின் திசையை நிர்ணயிப்பது தனிநபர்கள் அல்ல, தலைமைத்துவமும் பார்வையும் தான் என்றார்.
புனே இலக்கிய விழாவில் நடைபெற்ற ‘Diplomacy to Discourse’ நிகழ்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி ‘இந்தியாவுக்கு ஒரு மோடி போதுமா?’ என்பதுதான்” என்று கூறினார். இதன் மூலம், நாட்டின் வழிநடத்தலில் தலைவரின் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கருத்தை விளக்க, அவர் ஹனுமனை உதாரணமாக எடுத்து விளக்கம் அளித்தார். ஹனுமான் ஸ்ரீ ராமருக்கு தாசனாக இருந்து அவரது ஆணையை செயல்படுத்தியதை போல, நிர்வாகமும் தலைமைத்துவத்தின் பார்வையை நடைமுறைப்படுத்தும் கருவியாக செயல்படுகிறது. “இறுதியில் ஹனுமான் சேவை செய்கிறார்” என்ற அவரது வார்த்தைகள் கவனத்தை ஈர்த்தன.
மோடி பற்றி ஜெய்சங்கர்
மேலும், தற்போதைய உலக அரசியல் ஒரே மையத்தைச் சுற்றி இயங்கவில்லை என்றும், இது கூட்டணி அரசியல் போன்றது என்றும் ஜெய்சங்கர் கூறினார். எந்த நாடும் முழுமையான ஆதிக்கம் செலுத்தாத இந்த பலதரப்பு உலகில், இந்தியா தனது தேசிய நலனை மட்டுமே மையமாக வைத்து நெகிழ்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உறவுகளை சமநிலைப்படுத்துவது கடந்த சில ஆண்டுகளில் மிகவும் சிக்கலானதாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேசமயம், அண்டை நாடுகளுடன் இந்தியா எப்போதும் “முதலில் உதவும் நாடாக” செயல்பட்டதை அவர் எடுத்துக் காட்டினார்.
இறுதியாக, உலக அரங்கில் மௌனம் ஆபத்தானது என்றும், தேவையான நேரத்தில் இந்தியா தனது குரலை உயர்த்த வேண்டும் என்றும் ஜெய்ஷங்கர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், எப்போது பேச வேண்டும், எப்போது பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதே உண்மையான தூதரக நுண்ணறிவு என்றும் அவர் கூறினார்.

