- Home
- இந்தியா
- தொழில்நுட்ப கோளாறு.. அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் டயர் வெடிப்பு.. அலறி கூச்சலிட்ட 160 பயணிகளின் நிலை என்ன?
தொழில்நுட்ப கோளாறு.. அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் டயர் வெடிப்பு.. அலறி கூச்சலிட்ட 160 பயணிகளின் நிலை என்ன?
Flight Tire Burst: சவுதி அரேபியாவின் ஜித்தாவில் இருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, அதன் டயர் ஒன்று வெடித்து சிதறியது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
கேரள மாநிலத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சவுதி அரேபியாவின் ஜித்தாவில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோட்டுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 160 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்தில் லேண்டிங் கியரில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
தொழில்நுட்ப கோளாறு
இதனையடுத்து உடனடியாக விமானத்தை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க விமானி முடிவு செய்தார். இதுதொடர்பாக கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு பிரிவு தகவல் தெரிவித்து அதற்கான அனுமதியையும் பெற்றதை அடுத்து கோழிக்கோடு செல்லாமல் அவசரமாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது.
தரையிறங்கிய போது வெடித்த டயர்
விமானம் அவசரமாக தரையிறங்குவதை தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விமான நிலையத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு துறையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் விமானி விமான நிலைய ஓடுபாதையில் தரையிறக்கப்பட்ட போது விமானத்தின் டயர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதனையடுத்து 160 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டயர் வெடிப்பு குறித்து விசாரணை
இதனைத்தொடர்ந்து விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டு பேருந்துகளில் கோழிக்கோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு, டயர் வெடிப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டயர் வெடிப்பு குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

