இந்தியாவிலிருந்து வாங்கினாலும்.. நேபாளத்தில் எரிபொருள் விலை குறைவு ஏன்?
அரசியல் கலகம் மற்றும் எல்லை மூடல் காரணமாக நேபாளம் கடுமையான எரிபொருள் நெருக்கடியை சந்திக்கிறது. எரிபொருள் கடத்தல் அதிகரித்து வருவதும் ஒரு பெரிய கவலையாக உள்ளது.

நேபாள எரிபொருள் விலை
அண்டை நாடான நேபாளத்தில் அரசியல் கலகம் அதிகரித்து வருகிறது. பல முக்கிய தேவைகளுக்கு இந்தியாவையே சார்ந்து வாழும் நேபாளம், தற்போது எல்லை மூடப்பட்டதால் கடுமையான பிரச்சினையை சந்திக்கிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து மற்றும் வர்த்தகம் முற்றிலும் முடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல், மருந்துகள், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நேபாளம், தற்போது பொருளாதாரம் சிக்கல்களை எதிர்கொள்கிறது.
இந்தியாவை சார்ந்த நேபாள பொருளாதாரம்
நேபாளத்தின் மொத்த வர்த்தகத்தில் 60% க்கும் மேல் இந்தியாவுடனே நடைபெறுகிறது. குறிப்பாக எண்ணெய், மருந்துகள், இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவை அதிகமாக இந்தியாவில் இருந்து வருகிறது. 2024 புள்ளிவிவரப்படி, நேபாளம் இந்தியாவிலிருந்து $2.19 பில்லியன் மதிப்பிலான பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) மூலம் நேபாளத்திற்கு அதிகளவில் எரிபொருள் வழங்கப்படுகிறது.
நேபாளத்தில் எரிபொருள் விலை குறைவதற்கான காரணம்
இந்தியாவில் எண்ணெய் வாங்கினாலும், நேபாள மக்கள் குறைந்த விலையில் பெட்ரோல், டீசலைப் பெறுகிறார்கள். இதற்கு காரணம் நேபாள அரசு விதிக்கும் குறைந்த வரி மற்றும் மலிவு விநியோகச் செலவுகள். இந்தியாவில் அதிக வரி காரணமாக விலை உயர்ந்துள்ள நிலையில், நேபாளத்தில் லிட்டருக்கு சுமார் ரூ.20–ரூ.25 வரை குறைவான விலையில் கிடைக்கிறது. இதனால் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் கூட நேபாளத்தில் எரிபொருள் வாங்கிச் செல்கிறார்கள்.
கடத்தல் அச்சம் அதிகரிப்பு
உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற இந்திய எல்லைகளில் உள்ள மக்கள், மலிவான விலையில் நேபாளத்துக்கு சென்று எரிபொருள் வாங்குகிறார்கள். சில இடங்களில் எரிபொருள் கடத்தல் நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. நேபாள பெட்ரோல் பங்குகளில் இந்திய வாகனங்கள் அதிகம் காணப்படுவது இதன் சான்று. எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுத்து வந்தாலும், திறந்த எல்லைகள் காரணமாக இந்தப் பிரச்சினை தொடர்கிறது.
ஊழல் எதிர்ப்பு போராட்டம்
இதற்கிடையில், ஊழல், தவறான நிர்வாகம், 26 சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நேபாளத்தில் மக்கள் போராட்டம் வெடித்தது. இளைஞர்கள் நடத்திய வன்முறை கலவரம் நாடாளுமன்றம், ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதலாக மாறியது. அதிகரித்த அழுத்தத்தால், பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ய நேரிட்டுள்ளது. இதனால், நேபாள அரசியல் இன்னும் குழப்பநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

