- Home
- Business
- Toll Update: ஊருக்கு போறீங்களா? இனி டோல்கேட்டில் நிற்கவே தேவையில்லை! பெட்ரோல், நேரம் எல்லாமே மிச்சம்.!
Toll Update: ஊருக்கு போறீங்களா? இனி டோல்கேட்டில் நிற்கவே தேவையில்லை! பெட்ரோல், நேரம் எல்லாமே மிச்சம்.!
மத்திய அரசு 2026-க்குள் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய டிஜிட்டல் சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதனால் வாகனங்கள் நிற்காமல் சுங்கச்சாவடிகளைக் கடக்க முடியும், இது பயண நேரத்தையும் எரிபொருள் செலவையும் குறைக்கும்.

நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்
ஊருக்குச் செல்லும் போது சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பது பலருக்கும் பெரிய சிரமமாக இருந்து வருகிறது. இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டிஜிட்டல் சுங்கக் கட்டண வசூல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளது. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள், இந்த புதிய முறையை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சுங்கச்சாவடிகளில் நிற்கவோ, வேகத்தை குறைக்கவோ தேவையில்லை
இந்த புதிய அமைப்பு “பலவழிப் பாதை தடையற்ற சுங்கச்சாவடி” (Multi Lane Free Flow – MLFF) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்கவோ, வேகத்தை குறைக்கவோ தேவையில்லை. செயற்கை நுண்ணறிவு மூலம் வாகன எண்ணைப் பதிவு செய்து, தானாகவே கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் முழுமையாக நீங்கும்.
பயண நேரம், எரிபொருள் பெரிதும் சேமிக்கப்படும்.
முன்னதாக, சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த 3 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். பின்னர் ஃபாஸ்டேக் அறிமுகமானதால், அந்த நேரம் 60 விநாடிகளாக குறைந்தது. இப்போது MLFF நடைமுறைக்கு வந்தால், கார்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் தடையின்றி சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல முடியும். இதனால் பயண நேரம் குறைவதோடு, எரிபொருளும் பெரிதும் சேமிக்கப்படும்.
இந்த புதிய தொழில்நுட்பம் ஆண்டுதோறும் சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள எரிபொருள் சேமிப்பை ஏற்படுத்தும் என்றும், அரசின் வருவாய் ரூ.6,000 கோடி வரை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், 2026க்கு பிறகு ஊருக்கு போகும் பயணம் இன்னும் சுகமாகவும், செலவுச்சுருக்கமாகவும் மாறப் போகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

