தங்கத்தை விடுங்க.. 2026ல் உச்சத்தை தொடப்போகும் வெள்ளி விலை.. எவ்வளவு தெரியுமா?
உலகளவில் வெள்ளி விலை 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. விநியோக பற்றாக்குறை, சோலார் துறை போன்ற தொழில்துறை தேவைகள் அதிகரித்துள்ளதால், 2026-க்குள் வெள்ளி விலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலை கணிப்பு 2026
உலகளாவிய அளவில் வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் வெள்ளி விலை சுமார் 120 சதவீதம் வரை உயர்ந்து, உள்நாட்டு சந்தையில் முதல் முறையாக ரூ.2 லட்சத்தை தாண்டியுள்ளது. இதன் மூலம், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவிலான சாதனையை வெள்ளி பதிவு செய்யப்பட்டது. 1979-க்கு பிறகு இவ்வளவு பெரிய விலை உயர்வு காணப்படுவது இதுவே முதல் முறை என்பதால், முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
ஆய்வாளர்களின் கணிப்பின்படி, இந்த உயர்வு தற்காலிகமானது அல்ல. விநியோக பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால், 2026ஆம் ஆண்டு வெள்ளி விலை ரூ.2.40 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய நிலைமையிலிருந்து மேலும் 25 சதவீத உயர்வை குறிக்கிறது. சந்தையில் இது ஒரு கட்டமைப்பு மாற்றத்தின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
வெள்ளி முதலீடு
வெள்ளி விலை உயர்விற்கு முக்கிய காரணமாக விநியோகத் தடையும் தொழில்துறை தேவையும் எனக் கூறப்படுகிறது. உலகளாவிய வெள்ளி சுரங்க உற்பத்தி சுமார் 810 மில்லியன் அவுன்ஸ்களில் தேக்கமடைந்துள்ளது. இதில் 70–80 சதவீதம் வெள்ளி, ஈயம், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களின் துணை உற்பத்தியாகவே கிடைக்கிறது. இதனால், தனிப்பட்ட வெள்ளி உற்பத்தியை அதிகரிப்பது சவாலாக உள்ளது.
பசுமை ஆற்றல் திட்டங்கள் வேகமெடுத்துள்ளதால், தொழில்துறை தேவை மிகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளில் சோலார் ஆற்றல் துறையில் இருந்து வரும் வெள்ளி தேவை இருமடங்காகியுள்ளது. 2024ஆம் ஆண்டில், மொத்த வெள்ளி தேவையில் சுமார் 21 சதவீதம் சோலார் துறையிலிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை உயர்வு
இதற்கிடையே, உலக வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக சந்தையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. COMEX ஃபியூச்சர்ஸ் சந்தையில் வெள்ளி, லண்டன் ஸ்பாட் விலையை விட அதிக பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்த ஆர்பிட்ரேஜ் வாய்ப்பு காரணமாக, லண்டனில் இருந்து அமெரிக்க கையிருப்புகளுக்கு வெள்ளி மாறியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு சந்தையில், வெள்ளி விலை ரூ.1.70 லட்சம் முதல் ரூ.1.78 லட்சம் வரை சரிந்தால், அதை படிப்படியாக முதலீடு செய்ய ஏற்ற நிலை என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தொழில்துறை தேவை, விநியோக பற்றாக்குறை மற்றும் முதலீட்டாளர் ஆர்வம் தொடர்ந்தால், 2026ஆம் ஆண்டு வெள்ளி விலை ரூ.2.50 லட்சத்தை எட்டும் வாய்ப்பு அதிகம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

