கல்விச் செலவுக்கு சேமிப்பு: 1 கோடி ரூபாய் சேர்க்க வழிகள்
குழந்தைகளின் கல்விச் செலவுக்கு பெற்றோர் அதிகம் செலவிடுகின்றனர். சந்தை நிபுணர்கள் கூறும் சில வழிகளைப் பின்பற்றினால், பிள்ளைகளின் மேற்படிப்புக்கு ஒரு கோடி ரூபாய் வரை சேமிக்கலாம்.

கல்விக்கு கூடுதல் செலவு செய்யும் பெற்றோர்
ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் கல்விக்கு செலவிடும் தொகையே அதிகமாக இருக்கும். பள்ளிகூடத்திற்கு ஆகும் செலவை எப்படியோ சமாளிக்கும் பெற்றோர் மேற்படிப்புக்கு பணம் திரட்ட சிரமப்படுகின்றனர். அதிக மார்க் எடுத்து கவுன்சிலிங்கில் சீட் கிடைத்தால் கூட கல்லூரி படிப்புக்கு லட்சக்கணக்கில் செலவாகிறது.
கூடுதல் சேமிப்பு அவசியம்
சில விஷயங்களை செய்தால் கோடி ரூபாய் வரை கல்விக்காக சேமிக்கலாம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். பிள்ளைகளின் படிப்புக்கான முதலீட்டை சீக்கிரம் ஆரம்பிப்பதுடன், அது பணவீக்க விகிதத்தை விட இரு மடங்கு, அதாவது ஆண்டுக்கு சுமார் 12%-14% வருமானம் கொடுப்பதாக இருப்பதாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
நேரடி சந்தை முதலீடு வேண்டாம்
பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தருபவையாகவும், சிறிது சிறிதாக முதலீடு செய்யக்கூடிய வசதியைக் கொண்டதாகவும் உள்ளதால் அதில் முதலீடு செய்யலாம்.இதில் நேரடிப் பங்குச் சந்தை முதலீடு அதிக ரிஸ்க் என்பதால், பிள்ளையின் உயர்கல்விச் செலவுக்கான முதலீட்டுக்கு அதைத் தவிர்ப்பது நல்லது. அதே சமயம், பங்குச் சந்தையில் நல்ல பரிச்சயம் இருக்கிறது என்றால் முதலீட்டுத் தொகையில் ஒரு பகுதியை நிறுவனப் பங்குகளில், அதுவும் மிகப் பெரிய நிறுவனப் பங்குகளான லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம்.
1 கோடி ரூபாய் உங்கள் வசம்
முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பல்வேறு நிறுவனப் பங்குகளில் ரிஸ்க் குறைவு என்பதால், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பிள்ளைகளின் உயர்கல்விச் செலவுக்கு முதலீடு செய்து வரலாம்.சராசரியாக ஆண்டுக்கு 13% வருமானம் கொடுக்கக்கூடிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதந்தோறும் தலா ரூ.20,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால் ரூ.1 கோடி தொகுப்பு நிதி சேர்ந்துவிடும்.
பல பிரிவுகளில் முதலீடு செய்யுங்கள்
இந்த முதலீட்டுத் தொகை ரூ.20,000-ஐ தலா ரூ. 5,000 வீதம் பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் லார்ஜ் கேப் ஃபண்டுகள், பெரிய நிறுவனப் பங்குகள் மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட்கள், நடுத்தர நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் மிட் கேப் ஃபண்ட்கள், மற்றும் லார்ஜ் கேப் பங்குகள், மிட் கேப் பங்குகள், ஸ்மால் கேப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யலாம்.
முன்கூட்டியே திட்டமிட்டால் நல்லது
பிள்ளைகளின் உயர்கல்விச் செலவு என்பதால் மிக அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதால், ஸ்மால் கேப் ஃபண்டைத் தவிர்த்துள்ளோம். 15 ஆண்டுக் காலத்தில் ஸ்மால் கேப் ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுக்கக்கூடும். முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடியவர் என்றால் லார்ஜ் கேப் ஃபண்ட் முதலீட்டில் ரூ.5,000-ல் ரூ.2,500-ஐக் குறைத்துக்கொண்டு, ஸ்மால் கேப் ஃபண்டில் ரூ.2,500 முதலீடு செய்து வரலாம். பிள்ளைகளுக்கு உயர்கல்விச் செலவு களுக்கு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப என்ன செலவாகும் என்பதைக் கணக்கிட்டு, அதற்கு ஏற்ப முதலீடு செய்துவருவது சரியாக இருக்கும்.
கைகொடுக்கும் FD
மாதாமாதம் 10 ஆயிரம் ரூபாய் FDயில் போட்டு வந்தால், 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறும் சந்தை நிபுணர்கள் பின்னர் அந்த தொகையை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் சேமித்தால் அது இரண்டு மடங்காகும் என அறிவுறுத்துகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

