ஜூன் 14க்குள் ஆதார் அப்டேட் செய்யுங்கள்.. இல்லையெனில் கட்டணம் கட்ட வேண்டி வரும்!
10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டைகளை எப்போது வரை இலவசமாக அப்டேட் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், அரசு சேவைகளில் தடையைத் தவிர்க்க இப்போதே புதுப்பிப்பது அவசியம்.

ஜூன் 14 வரை இலவச ஆதார் அப்டேட்
10 ஆண்டுகள் கடந்த ஆதார் அட்டைகளுக்கான அப்டேட் சேவை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக உங்கள் ஆதார் விவரங்களை மாற்றாமல் வைத்திருந்தால், அவற்றை உடனே புதுப்பிப்பது அவசியமாகிறது. தற்போது, UIDAI வழங்கும் இந்த அப்டேட் சேவை ஜூன் 14 வரை முற்றிலும் இலவசமாகக் கிடைக்கிறது. அதன் பின்னர், எந்தவொரு அப்டேட்டிற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆகவே, அரசு சேவைகள் மற்றும் வங்கி செயல்பாடுகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க, இப்போது உடனடியாக உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து புதுப்பிப்பது நல்லது.
ஆதார் ஆவண அப்டேட்
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுக்கப்பட்டிருந்தால், அடையாளச் சான்று (POI) மற்றும் முகவரிச் சான்று (POA) போன்ற ஆவணங்களை மறுபடியும் அப்டேட் செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில், இந்த காலப்பகுதியில் உங்கள் முக அமைப்பு, முகவரி போன்றவை மாற்றமடைந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அரசின் நிதி உதவிகள், வங்கி KYC செயல்முறைகள் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட சேவைகள் அனைத்தும் தடைபடக்கூடும்.
ஆன்லைன் ஆதார் அப்டேட்
இந்த அப்டேட்டை ஆன்லைனில் செய்வது மிகவும் எளிது. myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP மூலம் லாகின் செய்ய வேண்டும். பின்னர் “ஆவண புதுப்பிப்பு” என்ற விருப்பத்தை தேர்வு செய்து, உங்கள் தற்போதைய விவரங்களை சரிபார்க்கலாம். அனைத்து தகவல்களும் சரியாக இருந்தால், "நான் சரிபார்க்கிறேன்" என்ற பெட்டியைக் குறிக்கவும். அதன், தேவையான அடையாள மற்றும் முகவரி ஆவணங்களை பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றும் ஆவணங்கள் என்னென்ன?
ஆவணங்களை அப்லோடு செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பதிவேற்றும் ஆவணங்கள் தெளிவாக இருக்க வேண்டும்; எந்த தகவலும் மங்கலாக இருக்கக் கூடாது. மேலும், ஆதாரில் உள்ள பெயருடன் உள்ள ஆவணங்களில் உள்ள பெயர் சரியாக பொருந்த வேண்டும். ஏதேனும் எழுத்துப்பிழை இருந்தால், முதலில் அதை திருத்தி விட்டு அப்டேட் செய்ய வேண்டும். மேலும், ஆவணங்களின் அளவு 2MB-ஐ மீறக்கூடாது, மற்றும் JPEG, PNG அல்லது PDF வடிவில் மட்டுமே இருக்க வேண்டும்.
இலவச சேவை கிடைக்கும்
இவ்வாறு அனைத்து செயல்முறைகளையும் முடித்த பிறகு, “சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் விண்ணப்பம் பதிவாகும். அதன் பிறகு, Service Request Number (SRN) கிடைக்கும். இதன் மூலம் உங்கள் அப்டேட் நிலையை எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கலாம். இலவச சேவை கிடைக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தி, உங்கள் ஆதார் விவரங்களை புதுப்பித்து, எதிர்கால சிக்கல்களைத் தவிர்ப்பது மிகவும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

