- Home
- Astrology
- Astrology: குரு பகவான் வீட்டில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! 5 ராசிக்காரர்கள் ராஜா பகவத் மாதிரி வாழப்போறீங்க.!
Astrology: குரு பகவான் வீட்டில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்.! 5 ராசிக்காரர்கள் ராஜா பகவத் மாதிரி வாழப்போறீங்க.!
Mangal Aditya Rajyog 2025: டிசம்பர் 16 அன்று சக்தி வாய்ந்த மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாக இருக்கிறது. அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மங்கள ஆதித்ய ராஜயோகம் 2025
வேத ஜோதிடத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் முக்கிய கிரகங்களாக அறியப்படுகின்றனர். இவர்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படுவது என்பது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்களும், சூரியன் ஒரு ராசியில் 30 நாட்களும் பயணிப்பார்கள். சூரிய பகவான் டிசம்பர் 16ஆம் தேதி தனுசு ராசிக்குள் நுழைய இருக்கிறார். தனுசு ராசிக்குள் ஏற்கனவே செவ்வாய் இருப்பதால் இருவரின் இணைப்பும் மங்கள ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறது.
செவ்வாய் பகவான் ஒரு ராசியில் 45 நாட்கள் பயணிப்பதால் அவர் ஒரு சுழற்சியை முடிக்க 18 மாதங்கள் ஆகும். 18 மாதங்களுக்குப் பிறகு அவர் தனுசு ராசிக்கு வருவதும், அங்கு சூரியனுடன் இணைந்து மங்கள ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்குவதும் ஜோதிட ரீதியாக சக்தி வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றியும், அதிர்ஷ்டமும் கிடைக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது. உங்கள் ராசியிலேயே இந்த யோகம் உருவாவதால் தனுசு ராசியினருக்கு சிறப்பான காலகட்டம் உருவாகும். உங்களின் ஆளுமைத் திறன் மேம்படும். செவ்வாய் பகவான் உங்களுக்கு முழு ஆற்றலையும், துணிச்சலையும், வீரத்தையும் வழங்குவார். உங்கள் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும். சமூகத்தில் உங்கள் புகழ் உயரும். நிதி நிலைமை மேம்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு 9-வது வீடான பாக்கிய ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது. இது அதிர்ஷ்ட வீடு என்றும் அழைக்கப்படுகிறது. எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு டிசம்பர் 16 முதல் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழியில் உள்ள பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் அல்லது சொத்துக்களில் இருக்கும் பிரச்சனைகள் விலகும். உயர்கல்வி அல்லது வெளிநாடு தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வருமானத்தில் நிலையான உயர்வு ஏற்படும். நிதி நிலைமை சீராக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு 6-வது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கலாம். எதிர்ப்புகள் விலகி வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை வாட்டி வதைத்து வந்த நோய்கள் அனைத்தும் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். போட்டிகள் நிறைந்த துறைகளிலும் வெற்றியை பெற்று முன்னேறிச் செல்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது. இந்த இடம் குழந்தைகள், காதல், புத்திசாலித்தனம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். லாபம் பெருகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். குடும்ப உறவுகள் வலுப்பெறும். உங்களின் அறிவுத்திறன் மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகும்.
மீனம்
மீன ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. எனவே மீன ராசிக்காரர்கள் டிசம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு தொழிலில் எதிர்பாராத முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் கிடைக்கலாம். சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

