நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாரணாசி சென்றிருந்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சென்னை திரும்ப முடியாமல் அங்கேயே தத்தளித்து வருகிறார்.
Robo Shankar daughter Indraja : நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காலமானார். அவரின் மறைவுக்கு பின்னர் அவரது மகள் இந்திரஜா, மருமகன் கார்த்திக், மனைவி பிரியங்கா ஆகியோர் வாரணாசி சென்று அங்கு அஸ்தியை கரைத்துவிட்டு வந்தனர். இதையடுத்து இம்மாதம் மீண்டும் ஒரு படப்பிடிப்பிற்காக வாரணாசிக்கு சென்றிருந்தார் இந்திரஜா, உடன் அவரது கணவர் கார்த்திக்கும் சென்றிருக்கிறார். அங்கு வேலை முடிந்து சென்னைக்கு திரும்ப இருந்த நேரத்தில் இண்டிகோ விமான சேவை முடங்கியதால், அவர் சென்னை வர முடியாமல் தத்தளித்து வருகிறார்.
வாரணாசி விமான நிலையத்தில் இருந்து எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திரஜா, இண்டிகோ விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்ததாகவும், ஆனால் தற்போது விமான சேவை முடங்கி இருப்பதால், சென்னை செல்ல முடியவில்லை எனவும் கூறி இருக்கிறார். தாங்களாவது பரவாயில்லை, இங்கு நிறைய முதியவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களால் எப்படி இந்த சூழலை சமாளிக்க முடியும் என கேள்வி எழுப்பி இருக்கிறார் இந்திரஜா.
வாரணாசியில் சிக்கிக்கொண்ட இந்திரஜா
அதேபோல் இந்த சூழலை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை தாறுமாறாக உயர்த்தி இருப்பதாக இந்திரஜாவின் கணவர் கார்த்திக் புகார் தெரிவித்துள்ளார். தாங்கள் சென்னையில் இருந்து வாரணாசிக்கு 6 ஆயிரம் செலவு செய்து வந்ததாகவும், தற்போது அந்த டிக்கெட் ரூ.83 ஆயிரம் காட்டுகிறது என வேதனையுடன் அவர் பேசி இருக்கிறார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இண்டிகோ விமான சேவை முடக்கத்தை பயன்படுத்தி மற்ற விமான நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதைப் போல், ஆம்னி பேருந்துகளும் டிக்கெட் விலையை தாறுமாறாக உயர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.


