ரஜினிகாந்தின் 'கூலி' உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Rajini fans celebrate Coolie : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரஜினியின் 171வது திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது, கேரளாவில் காலை 6 மணிக்கும், பெங்களூருவில் அதிகாலை 5 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரஜினி ரசிகர்களுக்காக மாஸான திரைப்படமாக கூலி உருவாகியுள்ளதாக கூறி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கூலி திரைப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
கூலி திரைப்படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மற்றும் சில ஆச்சரியமான கேமியோக்கள் ரசிகர்களை துள்ளி குதிக்க வைத்துள்ளது. இந்த நிலையில், ரஜினி மற்றும் நாகார்ஜுனாவின் அறிமுக காட்சிகள், சவுபின் ஷாயிரின் நடிப்பு அசத்தலாக இருப்பதாகவும், அனிருத்தின் இசை படத்திற்கு கை கொடுப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு கூலி திரைப்படம் வெளியான நிலையில் திரையரங்கில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும்,. கேக் வெட்டியும் கொண்டாடி வருகிறார்கள். திருப்பூரில் உள்ள திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் மேளதாளங்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கேக், இலவச சாப்பாடு- ரசிகர்கள் உற்சாகம்
குறிப்பாக திருப்பூர் சிவன் திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சினிமாவில் ரஜினியின் 50-வது ஆண்டை ஒட்டி 50 கிலோ கேக் வெட்டி, ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினர். நடன கலைஞர்கள் மூலம் டிஜே பார்ட்டி வைக்கப்பட்டு திரையரங்க முன்னிலையில் ஆட்டம் பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்னர். சில திரையரங்குகளில் பெண்களுக்கான சிறப்பு முதல் நாள் முதல் காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. ரஜினி ரசிகர் சங்கம் சார்பில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்பட்டது. பெண்கள் முதல்நாள் காட்சியில் செண்டை மேளம் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.


