தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை. ₹2.5 லட்சம் வருமான வரம்பு. விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் இதோ.

கல்விதான் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திறவுகோல். அதிலும் உயர்கல்வி என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதை மாற்றும் வகையில், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. 2025-26 கல்வி ஆண்டிற்கான கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு இப்போது விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஒரு மாபெரும் வாய்ப்பு!

யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன தகுதிகள்?

இந்தக் கல்வி உதவித்தொகை திட்டங்கள், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

• ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

• விண்ணப்பதாரரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான வருமானச் சான்றிதழ் அவசியம்.

• சாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு அவசியம்.

• இந்த கல்வி ஆண்டில் கல்லூரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களும் இப்போது விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது.

• மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியின் நோடல் அலுவலரை அணுக வேண்டும்.

• UMIS (University Management Information System) என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் (https://umis.tn.gov.in/) வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

• ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள், புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் கல்லூரியின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும்.

• சந்தேகங்களுக்கு, 1800-599-7638 என்ற கட்டணமில்லா எண்ணை அலுவலக நேரங்களில் தொடர்புகொள்ளலாம்.